வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம் மிகுந்த ஆபத்தான கட்டத்தை இன்று எதிர்நோக்கியுள்ளதாக
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகளவில் பல நாடுகளும் கொரோனா நோய் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறையினர் அந்நோயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கணிசமாகப் போராடி வருகின்றனர். அதற்கு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களும் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கமைய ஆதரவு தெரிவித்து வருகின்றது.
சிறிலங்காவில் மட்டுமே சுகாதாரத்துறையினரைவிட இராணுவத்துக்கு முதன்மையளிக்கும் செயற்பாடு நடைபெற்று வந்துள்ளது.
மாகாண சுகாதாரத் திணைக்களங்கள் தமது மாகாணங்களை தனித்துவமான முறையில் சுதந்திரமாகத் திட்டமிட்டு பாதுகாக்க முடியாதவகையில் இராணுவதலையீடுகளும் மத்திய அரசின் தலையீடுகளும் உள்நுழைந்து வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம் மிகுந்த ஆபத்தான கட்டத்தை இன்று எதிர்நோக்கியுள்ளது.
தமிழர் தாயகத்தில் ஏற்கனவே இனவழிப்பை அரங்கேற்றிய இதே அரசாங்கம் கொரோனா நோய்த்தொற்றைக் காவித்திரியும் அதே இராணுவத்தினரைக்கொண்ட முப்படையினருக்கான தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றைக்கட்டுப்படுத்தும் நிலையங்களை வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளின் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நிறுவ முற்படுவது மேலுமொரு இனவழிப்பை மேற்கொள்ளும் நோக்கமேயாகும்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவத்தினரின் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு அப்பிரதேச மக்கள் எதிர்க்கும்போது - பொலிசாரைக் கொண்டு ஊரடங்கு நிலையை சாட்டாகக்கொண்டும், மனித இடைவெளி நிலைகளை கடைப்பிடிக்கவில்லை என்ற பொய்யான காரணங்களைக்கொண்டும் மக்களை கைது செய்யப்போவதாக மிரட்டி மக்களை தாக்கியுமுள்ளனர்.
எமது உறவுகளைக் காணாமலாக்கி, தமிழ் மக்களுக்கெதிராக மிகப்பெரும் மனித பேரவலத்தையும், இனவழிப்பையும் செய்த இதே இராணுவத்தைக்கொண்டு மீண்டும் ஒரு தமிழின அழிப்பை வடக்கு கிழக்கு தாயகத்தில் திட்டமிட்டு நடத்த முயற்சிப்பதை அனுமதிக்கமுடியாது.
இதனடிப்படையில் தமிழர் தாயகத்தில் முப்படையினருக்கான கொரோனா தொற்று பராமரிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதனை அரசு நிறுத்த வேண்டும்.
இந்த அரசால் அம்பாந்தோட்டையில் மக்கள் செறிவாக வாழும் பிதேசத்தில் ஒரு தனிமைப்படுத்தல் முகாமை அமைக்க முடியுமா?
மாத்தள விமான நிலையம் பலகாலமாக பயன்பாடற்று இருந்துள்ளது. அங்கு முப்படையினருக்கான தனிமைப்படுத்தல் முகாம்களை அமைக்க இந்த அரசு ஏன் முயற்சிக்கவில்லை?
வெளிமாவட்டங்கள் அனைத்திலிருந்தும் கொரோனா தொற்றாளர்களை கொண்டுவந்து தனிமைப்படுத்தல் என்ற பெயரில் தமிழ் இனத்தை திட்டமிட்டு ஆபத்திற்குள் தள்ளுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே தமிழர் தாயகத்தில் மேற்படி முப்படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்கும் செயற்பாட்டினை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

