7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 23 ஏப்ரல், 2018

இரணைதீவை மீட்பதற்கு படகு மூலம் படையெடுக்கும் மக்கள்!

தமது பூர்வீக இடத்தை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒராண்டுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டிருந்தனர்.
 
இந்த நிலையில் அந்த மக்கள் நேற்று படகுகள் மூலம் இரணைதீவுக்குச் சென்றனர். 
 
தமது கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படாததால் அங்கு தங்கியிருந்து போராட்டத்தைத் தொடர அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
 
கிளிநொச்சி, இரணைதீவைச் சேர்ந்த மக்கள் 1992ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் முழங்காவிலில் அமைக்கப்பட்ட இரணைமாதா கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
 
போர் முடிவுற்றபின்னர் தங்களைத் சொந்த இடமான இரணைதீவில் குடியமர அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்திருந்தனர். 
 
இரணைதீவு கடற்படையினரின் வசமிருந்த நிலையில் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
 
வடக்கு அரசியல்வாதிகளிடம் இது தொடர்பில் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் எதுவும் நடைபெறவில்லை.
 
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டபோதும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. அதையடுத்துக் கடந்த ஓராண்டாகத் தமது கோரிக்கையை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
நேற்று அவர்கள் இரணைதீவுக்கு வெள்ளைக் கொடிகளுடன் சுமார் 50 படகுகளில் சென்றனர். அவர்களின் போராட்டத்துக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பும் ஆதரவு வழங்கியது.
 
மு.ப. 10 மணியளவில் படகுகள் மூலம் இரணைதீவுக்குச் சென்ற மக்களை கடற்படையினர் தடுக்கவில்லை. அங்கு சென்ற மக்கள் அங்குள்ள தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன்பின்னர் தம்மை மீள்குடியமர அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த முற்பட்டனர்.
 
அங்கிருந்த கடற்படையினர் மக்களுடன் பேச்சு நடத்தினர். உரிய உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
 
அதை ஏற்றுக்கொள்ளாத மக்கள் தமக்குத் தீர்வு கிடைக்கும் வரையில் இரணைதீவுக் கிராமத்தில் தங்கி நின்று போராட்டத்தைத் தொடரத் தீர்மானித்துள்ளனர். சுமார் 400 குடும்பங்கள் இரணைதீவுக் கிராமத்தில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
மாவட்டச் செயலரோ அல்லது பிரதேச செயலாளரோ அல்லது பாதுகாப்பு அமைச்சில் இருந்தோ சரியான பதில் கிடைக்கும் வரை இரணைதீவை விட்டு வெளியேறுவதில்லை. இரணைதீவும் எமது வளங்களும் எம்மைவிட்டுப் பறிபோகும் மிக ஆபத்தான நிலை உருவாகியுள்ளது.
 
அந்த வளங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதாலும் எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அங்கு நாம் மீள்குடியமரவேண்டிய மிக அவசர தேவை எழுந்துள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
 
உணவு மற்றும் குடிதண்ணீர் பற்றாக்குறையுடன் அங்கு போராட்டத்தைத் தொடர்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்