7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 5 மார்ச், 2020

அனைத்தையும் மறந்து தமிழர்கள் எம்மோடு இணையுங்கள் .. கோட்டாபய அழைப்பு

ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தை மறந்து அனைவரும்
தம்முடன் இணைந்து பயணிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்கள் அனைவரும் மரணித்துவிட்டதாகவும் மீண்டும் அடித்துக் கூறியுள்ள கோட்டாபய ராஜபக்ச, அதனால் அந்தப் பிரச்சனை தொடர்பில் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பிலுள்ள அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களை இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக் கூறலையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் விலகியதுடன், பொறுப்புக் கூறும் கடப்பாட்டை உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தது.
இருப்பினும் ராஜபக்ச அரசாங்கத்தின் இந்த வாக்குறுதி மீது நம்பிக்கை கொள்ளமுடியாது என்று கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெஷிலே, ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னிலையிலேயே நிராகரித்திருந்தார்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் நீதி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளும் ராஜபக்ச அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறை யோசனையை நிராகரித்து வருவதுடன், சர்வதேச சமூகம் தலையிட்டு சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாக தமக்கான நீதியை நிலைநாட்டிக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களை சந்தித்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம், பாதிக்கப்பட்ட மக்களும் நிராகரிக்கும் நிலையில் எவ்வாறு உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வுகாண போகின்றீர்கள் என்று ஐ.பி.சி தமிழ் சார்பாக இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர் சிரியான் சுஜித் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேரடி பதிலை அளிக்காமல் மழுப்பல் பதிலையே வழங்கியிருந்தார்.
கோட்டாபய தெரிவித்திருந்ததாவது,
இராணுவத்தினர் பக்கத்திலும் 4000க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். போர்க் காலத்திற்குப் பின்னர் சிறுவர்கள் தொடர்பாக செயற்பட்டு வரும் ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் வடபகுதிக்குச் சென்று ஆய்வொன்றை நடத்தி அறிக்கையொன்றை தயாரித்திருந்தனர். சுயாதீனமாக தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையும் எம்மிடம் சமர்பிக்கப்படவில்லை.
இருப்பினும் அவர்கள் நடத்திய ஆய்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து 2600 முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. அவற்றில் படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறி 08 முறைப்பாடுகள் மாத்திரமே பதிவாகியுள்ளன. எஞ்சிய அனைத்தும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கடத்தப்பட்டவர்களாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போது கூறுங்கள் காணாமல் போனோர் பற்றிய விடயத்தில் என்ன சொல்லலாம். முகமாலை மீட்புப் போராட்டத்தில் 160க்கும் மேற்பட்ட படையினரது சடலங்கள் அடையாளம் காணமுடியாமல் இருந்தன.
அவர்களது சடலங்களில் பலவற்றை நாம் ஏற்கவும் இல்லை. கிடைக்கவும் இல்லை. எனவே அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாகத் தான் இன்று வரை கருதப்படுகின்றனர்.
அதேபோல போர்க் காலத்தில் காணாமல் போனோரும் உயிரிழந்திருக்கலாம். சடலங்கள் மீடகப்படாமல் இருந்திருக்கலாம். படையினரது சடலங்கள் மீட்கப்படாத பட்சத்தில் அவர்களும் காணாமல் போனவர்கள் என்றே நினைக்கின்றோம்.
அதேபோல இறுதிப் போரில் சரணடைந்தவர்கள் காணாமல் போனார்கள் என்று இரண்டு மூன்று பேர் கூறினாலும் அவ்வாறு இடம்பெறவில்லை.
காணாமல் போனோர் பற்றி 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் எமது அரசாங்கத்தினால் விசேட தகவல் திரட்டல் செய்த போதிலும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் முழுமைப்படுத்த முடியாமற் போய்விட்ட நிலையில் இப்போது மரணச் சான்றிதழை வழங்கும் முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிலர் வெளிநாடுகளில் வாழ்வதாகவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் ராஜபக்ச சகோதரர்களும், அதேபோல் அவர்களின் கட்சியான ஆளும் பொதுஜன பெரமுனவினரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச இன்று மீண்டும் அதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.
சிலர் இங்கு காணாமல் போனதாகக் கூறினாலும் கனடாவில் அவர்கள் தோன்றியுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அதனால் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டதன் பின்னரே அவர்களுக்கான மரணச் சான்றிதழை பெற்றுக் கொடுக்கலாம்.
ஆகவே காணாமல் போனோர் விடயத்தை இப்போதாவது அனைவரும் மறந்துவிட்டு முன்நோக்கி பயணத்தை தொடர்வதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது குறுக்கீடு செய்த ராவய பத்திரிகையின் ஊடகவியலாளர், அவ்வாறென்றால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரச தலைவராக பதவி வகித்த போது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரபல கேலிச்சித்திர கலைஞரும், புலனாய்வு ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொட குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று கோட்டாபய ராஜபக்சவிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய, அவர் காணாமல் போயுள்ளாரா அல்லது மரணித்துவிட்டாரா என்று தெரியாது என்று கூறியது மாத்திரமன்றி, ஒருவேளை காணாமல்போய் மரணித்திருந்தால் அவருக்கான மரணச் சான்றிதழை வழங்கவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப் பிரச்சனை ஒரு அரசியல் பிரச்சனையல்ல என்றும் இன்றைய தினமும் தெரிவித்த ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, தமிழ் மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சனை என்றும் குறிப்பிட்டார்.
இதனால் அவர்களது பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை பெற்றுக்கொடுத்தால் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்வதன் ஊடாகவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்.
முன்னர் இடதுசாரி கொள்கை பின்பற்றப்பட்டபோது இப்படியான அரசியல் தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் இருக்கவில்லை. இருப்பினும் அது காலத்தின் அடிப்படையில் மாற்றமேற்பட்டு தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டதால் ஒவ்வொரு அரசாங்கங்களும் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் சிங்கள மக்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. எனினும் வடக்கு மக்களுக்கு எல்லாமே இந்த அரசாங்கம் செய்துகொடுப்பதாக தென்னிலங்கையில் சிந்தனை உள்ளதோடு தெற்கிற்கு மாத்திரமே அனைத்தும் வழங்கப்படுவதாக வடக்கு மக்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் மக்களின் இவ்வாறான தவறான கருத்துருவாக்கத்தை மாற்றியமைத்து அவர்களுக்கான பொருளாதார சந்தர்ப்பங்களை மேம்படுத்தி தீர்வு காண முடியும் என்பது எனது நம்பிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்