7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

மூன்றாம் உலகப்போர் உணர்வில் உலகம்

உலகம் முழுவதும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உறைந்து
போயுள்ளது என யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தில் அவர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் அயராது பாடுபடும் நமது நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அரச தரப்பினர், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர், பொலிஸ் உள்ளிட்ட முப்படையினர் அரச மற்றும் தனியார் நிர்வாகத்துறையினர், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுதலையும் தெரிவிப்பதுடன் இறை ஆசீரையும் வழங்குகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இறைமக்கள் தவக்காலம் நிறைவடைந்து புனித வாரத்தில் தடம் பதிக்கும் நிலையில், இன்றைய பயங்கரமான சூழலில் ஆழமான இறை விசுவாசத்தை உணர்த்தி நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உறைந்து போயுள்ளது. உயிரிழப்புக்கள் மலிந்து, பொருளாதாரம் நலிந்து சொல்லொணா வேதனைகளுடன் மனுக்குலம் முழுவதும் கல்வாரிப் பாதையில், கொல்கொதா மேட்டில் சிலுவை சுமந்து நிற்கின்றது. நிச்சயம் ஆண்டவரின் உயிர்ப்பு நம்மை மீட்கும் என ஆசி வழங்கியுள்ளார்.
அத்துடன் வெறுப்புணர்வுகளையும், குரோத உணர்வுகளையும், தேவையற்ற பொய்யான பரப்புரைகளையும் களைந்தவர்களாய் கொரோனாவை ஒழிக்க இறைவன் துணையுடன் செப தபங்கள் வழி ஒன்றுபட்ட மக்களாக வாழ்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டு ஆலய வழிபாடுகளின்றி வாழும் நாம், எமது வீடுகளை ஆலயங்களாக மாற்றி குடும்ப செபங்களிலும், இறை தியானங்களிலும் ஈடுபட்டு இறை விசுவாசத்தை மேன்மேலும் ஆழப்படுத்த வேண்டும் என நன்றியோடு கேட்டுக்கொள்கின்றேன்.
நாம் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அரசியல் ரீதியான பகைமைகளையும், சமூக ஏற்றத் தாழ்வுகளையும், மத ரீதியான பிரிவுகளையும் மறந்து, மன்னித்து மனிதநேயம் மிக்கவர்களாக ஒன்றிணைந்து, நாட்டு நலன், சமூகநலன், குடும்ப நலன் என்பவற்றை பேணிக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடின் அபாயங்களிலிருந்து நாம் மீண்டெழ முடியும்.
அபாயகரமான இவ்வேளையில் நமது நாட்டில் தன்னலங்கருதாப் பணிபுரியும் அர்ப்பணிப்பு மிகுந்த அனைத்து உள்ளங்களையும் நன்றியோடு நினைவு கூருகின்றேன். நமது நாடு, உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தாக்கத்தால் பெருமளவு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பலரின் மனிதநேயப் பணிகளே காரணம் என்பதை நாம் நன்கறிவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்